ரஷ்ய - யுக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்! - விசாரணை ஆரம்பம்!

ரஷ்ய - யுக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்! - விசாரணை ஆரம்பம்!

ரஷ்ய மற்றும் யுக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள்  நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னதாக வழங்கப்பட்ட விசா நீடிப்புகளை ரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நீண்டகாலமாக நாட்டில் வசிக்கும் ரஷ்ய மற்றும் யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளை நாட்டை விட்டு வெளியேற குடிவரவுத் திணைக்களம் 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக முன்னதாக அறிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

கடந்த 22ஆம் திகதி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சுற்றுலா அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்குமாறு கோரியுள்ளார்.

ரஷ்ய - யுக்ரைன் மோதலை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி  முதல், இரண்டு ஆண்டுகளாக, அந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், விசா நிறைவடைந்த போதிலும் இலங்கையில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானங்கள் தற்போது வழமையாக இயங்குவதாகவும், யுக்ரேனியர்களும் நாட்டிற்குள் நுழைவதற்கு அல்லது இங்கிருந்து வெளியேறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி விசா இன்றி இந்த நாட்டில் தங்குவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.