ரணிலுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு - நாமலை களமிறக்க காரணம் இதுதான்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போராட்டத்தின் போது நாட்டு மக்கள் இளம் தலைவரை கோரினார்கள்.
இதன் காரணமாகவே நாமல் ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக களமிறக்கினோம் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச திறமையானவர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் சென்றுள்ள பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இன்று கட்சிக்கு எதிராகவும், கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இவர்கள் அடுத்த நாடாளுமன்றத்துக்கு தெரிவாகுவது கூட சந்தேகமாக உள்ளது. ஜனாதிபதி பக்கம் சென்றுள்ளவர்களுக்கு அங்கும் இடமில்லை, இங்கும் இனி இடமில்லை.
சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுபவர்களை நெருக்கடியான தருணங்கள் வெளிப்படுத்தும்.
வெற்றிப் பெறும் சிறந்த வேட்பாளரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். ஜனாதிபதி பக்கம் சென்றுள்ளவர்கள் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியல் பொறுமையை இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் சரத் பொன்சேகா அண்மையில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.
இதன்படி கடந்த 5ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்திய சரத் பொன்சேகா, கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
000000000000
தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றாகும்....
ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த 5ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.