சிக்காகோவாகிய கொழும்பு - தென்னிலங்​கையை  உலுக்கிய துப்பாக்கி கலாசாரம்!

சிக்காகோவாகிய கொழும்பு - தென்னிலங்​கையை  உலுக்கிய துப்பாக்கி கலாசாரம்!

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரியில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகதுரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்த சம்பவத்தில் கிளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாகதுரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் பணமும் கிளப் வசந்தவிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் கிளப் வசந்தவிடம் பணத்தை தருமாறு கோரியுள்ளார். ஆனால், அந்த பணத்தை கிளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் கிளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.

இந்த பின்னணியில், கிளப் வசந்த அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 03 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் Tattoo நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்தும் திறன் கொண்டவர் எனவும், ஆனால் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கிளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். 

அழைப்பை ஏற்று கிளப் வசந்த, அவரது மனைவியும் பாடகியுமான கே.சுஜீவா உள்ளிட்டோர் நேற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிலையத்திற்கு காரில் வந்த இருவர், 17 வினாடிகளில், சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் மற்றொரு நபர் உயிரிழந்தனர். 

கிளப் வசந்தவின் மனைவி, பாடகி கே. சுஜீவா மற்றும் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே சுஜீவா மற்றும் மற்றுமொருவர் அத்துருகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுடப்பட்ட கே.சுஜீவாவின் ஒரு கால் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும் அவர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து கிளப் வசந்தவின் மனைவியும் மற்றுமொரு பெண்ணும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமடைந்த நிலையில், கிளப் வசந்தவின் மனைவி சுஜீவா நேற்று இரவு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரது கால் துண்டிக்கப்படாமல் சத்திரசிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் சத்திர சிகிச்​சை நிபுணர்கள், இரத்த குழாய் சத்திர சிகிச்​சை நிபுணர்கள், எலும்பியல் சத்திர சிகிச்​சை நிபுணர்கள் மற்றும்  பொது சத்திர சிகிச்​சை நிபுணர்கள் என 4 குழுக்கள் சுஜீவாவின் சத்திர சிகிச்சையில் பங்கு பற்றியதாக கொழும்பு தேசிய வைத்திய சலையின் பணிப்பாளர் ருக்‌ஷான் ​​பெல்லன தெரிவித்தார்.

பாடகி கே.சுஜீவா மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பதோடு பிரபல பாடகர் மகிந்தகுமாரின்​  சகோதரியும் ஆவார்.

இவர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இதேவேளை, புலத்சிங்கள, அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த நிலமொன்றில் இருந்து கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரியில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், புலத்சிங்கள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கார் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.