கலவரத்தில் முடிந்த ஹரிஹரன் ஸ்டார் நைட் நிகழ்ச்சி!

ஹரிஹரன் ஸ்டார் நைட் நிகழ்ச்சி நேற்று இரவு இடம்பெற்ற நிலையில் ரசிகர்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை காரணமாக இடை நடுவில் நிறுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு உரிய வகையில் ஆசனங்கள் ஒதுக்கப்படாமை காரணமாக அவர்கள் முன்னோக்கிய வரிசைகளுக்கு தன்னிச்சையாக செல்ல ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக இசை நிகழ்ச்சி பல தடவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இறுதியில் ரசிகர்கள் கொந்தளித்ததன் காரணமாக சிறிது நேரத்தில் முற்றாக நிறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக 25 ஆயிரம் 15 ஆயிரம் பத்தாயிரம், ஐயாயிரம் போன்ற விலைகளில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன.

இதை தவிர நான்கு கட்டங்களுக்கு பிறகு இறுதி வரிசையில் இலவசமாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

இருந்த போதும் அவர்களுக்கு மேடை சரி வர தெரியாததன் காரணமாக அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதன் போது கழகம் அடக்கும் பொலிஸாரும் ஏனைய பொலிஸாரும் கடமையில்  ஈடுபடுத்தப்பட்டு குழப்பம் ஏற்படுத்தியவர்களை தடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஏற்பட்ட சன நெரிசலின் காரணத்தினால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிகழ்வை பார்வையிட வருகைத்தந்த ரசிகர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டமையினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.