பேர்த்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

பேர்த்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், குறித்த நடவடிக்கையுடன் தொடர்ச்சியாக இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

காலநிலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் புலம்பெயர் இலங்கையர்கள் உறுதியளித்துள்ளனர்.

புலம்பெயர் இலங்கையர்களுக்கான அலுவலகம் ஒன்றை பேர்த் நகரில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனீ வோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் செயற்பாடுகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனீ வோங்கிடம் ஜனாதிபதி இதன்போது விளக்கியுள்ளார்

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல புதிய துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.