மலையக மக்கள் தொடர்பில் பிரித்தானிய இளவரசி கூடிய கவனம் செலுத்த வேண்டும்!
இலங்கையில் மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் பிரித்தானிய இளவரசி ஹேனியிடம் விளக்கமளிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அயலக தமிழர் மாநாடு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகம் பயணித்துள்ள அவர், விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ள (09) தமிழ் உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மலையக மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கடிதமொன்று பிரித்தானிய இளவரசி ஹேனியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய பிரித்தானிய அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள இளவரசி ஹேன், மலையக மக்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.