அமைச்சரையும் மிஞ்சி செயலாளர் ஒருவரால் கடிதம் வெளியிட முடியுமா?

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு குறித்து தவறான கடிதங்களை வெளியிடும் செயலாளர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

இந்நாட்டின் ஆசிரியர்-அதிபர் சேவையில் பி.சி.பெரேரா அறிக்கையுடன் ஆரம்பமான சம்பள முரண்பாடுகளுக்கு அரசாங்கத்தினால் இதுவரை தெளிவான தீர்வை வழங்க முடியாது போயுள்ளது.

கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை பாரிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் ஆசிரியர்களும் அதிபர்களும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் போது, கல்வி அமைச்சின் அதிகாரிகள் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளில் இருந்து கொண்டு கடிதங்களை வெளியிட்டமையால் ஒட்டுமொத்த கல்வித்துறை அதிகாரிகளும்

பெரும் இடையூறுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

நாட்டின் ஒட்டு மொத்த கல்வித் துறையில் ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினை காணப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்

உயர் நீதிமன்றமும், பொதுச் சேவை ஆணைக்குழுவும் கூட சம்பள முரண்பாடுகள் இருப்பதாக பரிந்துரைத்துள்ள நேரத்தில், கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் தனித் தீர்மானத்தை எடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிரேஷ்ட உதவிச் செயலாளர் வாசனா குணரத்ன எனும் அதிகாரி அமைச்சரைக் கூட மிஞ்சி கடிதங்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இவரால் நடந்து கொள்ள முடியாது. அவருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை குறித்தும், இக்கடிதத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (25) நாடளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த செயற்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். 

அத்துடன், ஆசிரியர் சேவையில் உள்ள 40,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.