உறவுகளின் போராட்டம் நீர்த்து விடக்கூடாது  - இடைவிடாது தொடருவோம்!

உறவுகளின் போராட்டம் நீர்த்து விடக்கூடாது  - இடைவிடாது தொடருவோம்!

உறவுகளின் போராட்டம் நீர்த்து விடக்கூடாது என்பதற்காக  போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு இன்றையதினம் (26) இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதன் காரணமாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு  முல்லைத்தீவு போராட்ட இடத்திற்கு அருகாமையில் இன்று (26)  இடம்பெற்றிருந்தது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோ.கனகனகரஞ்சினி, மன்னார் மாவட்ட தலைவி ம.உதயசந்திரா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஆரம்பமாகிய தெரிவு கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட தலைவியாக நி.வசந்தினி, செயலாளராக பொ.கரன், பொருளாளராக நாகேஸ்வரி, உப தலைவராக ப.வீரமணி, உப செயலாளராக றஞ்சினிதேவியும் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தெரிவு கூட்டத்திற்கு  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரதினம் அன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற இருக்கின்றது. 

குறித்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். 

அத்தோடு உறவுகளின் போராட்டம் நீர்த்து விடக்கூடாது என்பதற்காக உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என இதன் போது தெரிவித்திருந்தார்கள்.