உடல் உறுப்புகளின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்!
கல்வி ராஜாங்க அமைச்சர் முன்னிலையில் அதிகளவிலான உடல் உறுப்புகள், தசை நாண்கள் மற்றும் தசைநார்களின் பெயர்களை ஒப்புவித்து 6 வயது சிறுவன் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
நுவரேலியாவின் லவ்வர்ஸ் லீப் பகுதியில் வசித்துவரும் கலைநேசன் மற்றும் லலிதாம்பிகை ஆகியோரின் மகன் 6 வயதான ஹர்சித்.
நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லாரியில் பயின்று வரும்
இவர் கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் முன்னிலையில் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.
இதன்போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த மனித உடல் உறுப்புகளின் உருவப்படத்தைப் பார்த்து அதிலிருந்த உடல் உறுப்புகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் போன்றவற்றை தொட்டு அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களை தெளிவாகக் கூறினார்.
இவருடைய இந்த முயற்சியை கண்காணித்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா போன்றோர் உலக சாதனையை உறுதி செய்தனர்.
இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபில் ஹெல்பிங் பீபில் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தியிருந்தன.
சோழன் உலக சாதனை படைத்த ஹர்சித்தைப் பாராட்டிய கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கம் போன்றவற்றை சாதனை மாணவனுக்கு வழங்கிப் பாராட்டினார்.
கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அலுவலகத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனின் இயக்குநர் க்லாரன்ஸ் சம்மேல்
போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த மாணவன் ஹர்சித்தை வாழ்த்திப் பாராட்டினார்கள்.