பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய ஹைதராபாத்

பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய ஹைதராபாத்

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு (06) நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

இதன் விளைவாக, SRH அணி IPL பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறியது.

அதே நேரத்தில், DC அணி விளையாடும் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டியிருப்பதால் அதன் பாதை கடினமாகிவிட்டது.

ஹைதராபாத் ரஜீவ் காந்தி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற SRH அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

SRH அணிக்காக பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து, அசுதோஷ் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 41 ஓட்டங்களை எடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியை 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களுக்கு கொண்டு சேர்த்தனர்.

SRH அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் கருண் நாயர், அபிஷேக் போரெல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோரை ஆட்டமிழக்க வைத்து SRH அணிக்கு சரியான தொடக்கத்தை அளித்தார்.

இதையடுத்து 134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் SRH அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட இருந்தது.

எதிர்பாராத விதமாக பெய்த மழையால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டால், ஐதராபாத் அணிக்கு ஓவர்களை குறைத்து வெற்றி இலக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், மழை விடாமல் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால், ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

இந்த முடிவினால், SRH அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்குப் பின்னர் முதல் நான்கு இடங்களுக்குள் அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெறாத மூன்றாவது அணியாக ஆரஞ்சு ஆர்மி ஆனது.

பகிரப்பட்ட புள்ளிகளுக்குப் பின்னர் டெல்லி கேபிடல்ஸ் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

அக்சர் படேல் தலைமையிலான அணி இப்போது நான்காவது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸை விட ஒரு புள்ளி பின்தங்கியுள்ளது.