4 வாரங்களுக்கு மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான நீரே உள்ளது!
வறட்சியான காலநிலை காரணமாக இன்னும் 4 வாரங்களுக்கு மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவே உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகின்ற நிலையில் நீர்மின் உற்பத்தி 13.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், பெரும்பாலான மாற்று முறைமைகளை பயன்படுத்தி எந்தவித மின் தடையையும் ஏற்படுத்தாமல் தொடர்ந்தும் மின்சாரம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார் மற்றும் பூநகரி 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் நிறைவு செய்வதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தலைமையில் நடைபெற்ற 6 புதுப்பிக்கத்தக்க சக்தி வலுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யும் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.