ஐ.பி.எல் - பஞ்சாப் , டெல்லியுடன் இன்று மோதல்

10 அணிகள் இடையிலான 18 ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 66 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இவ்விரு அணிகள் கடந்த 8ஆம் திகதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டியும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த போட்டி தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.
பஞ்சாப் அணி 12 போட்டிகளில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகளுடன் பிளே ஒவ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி 13 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
தற்போது புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேற முடியும் என்பதால் வெற்றி பெற பஞ்சாப் கடுமையாக போராட உள்ளது. மறுபுறம் சீசனை வெற்றியுடன் நிறைவு செய்ய டெல்லி அணி போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.