வரலாற்றுச் சாதனை புரிந்த இந்துவின் மைந்தனுக்கு பழைய மாணவர் சங்கத்தினரால் பாராட்டுதல்களும், பரிசில்களும்!
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் (SLSCA) 13 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டாம் கட்ட முதல்தர போட்டியில் கொழும்பு 4 - இந்துக் கல்லூரியின் மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் அபாரமாக பந்துவீசி ஓட்டங்கள் எதனையும் வழங்காது 08 விக்கெட்டுகளை வீழ்த்தி பாடசாலை மட்டத்தில் சாதனைப் படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
கடந்த 24ஆம் திகதி இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் பத்தரமுல்லை எம்.டி.எச்.ஜயவர்தன மகா வித்தியாலயத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டிலேயே செல்வசேகரன் ரிஷியுதன் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து பல தரப்பட்ட தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுதல்களைப் பெற்ற சாதனை மாணவன் ரிஷியுதனின் எதிர்கால கிரிக்கெட் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இந்துக் கல்லூரி கொழும்பின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவுக் கேடயமும், முழுமையான கிரிக்கெட் விளையாட்டு உபகரண பொதி மற்றும் சீருடை மற்றும் காலணிகள் பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்களையும் பெற்றுக் கொடுத்ததுடன் இந்நிகழ்வு சம்பந்தமாக ஊடகவியலாளர் சந்திப்பையும் கல்லூரியின் ஊடகப்பிரிவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த சாதனை மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் "எனது முழுத்திறமையையும் எவ்வாறாவது வெளிக்காட்டி எதிர்காலத்தில் இலங்கை 19 வயதிற்குட்பட்ட தேசிய அணியில் இடம்பிடிப்பதே எதிர்கால இலட்சியம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டுத்துறைக்கான உப தலைவர் வைத்தியர் ரஜீவ் நிர்மலசிங்கம் - கல்லூரியில் 2 வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் பயிற்சி நிலையத்தினை ஆரம்பித்து இருந்தோம்.
அதில் இருந்து இந்த சாதனை மாணவனை அடையாளப்படுத்தியதைப் போல அனைத்து மாணவர்களும் விளையாட்டு நிகழ்வுகளில் மிளிர வேண்டும் எனவும் விளையாட்டுத் தொடர்பான ஆர்வத்தை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் ஆர். இளங்கோவன் இம்மாணவனுக்கான முழுமையான கிரிக்கெட் விளையாட்டு சாதனப் பொதியினை 1987 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கியதாகவும் மேலும் இவருக்கு முதன்மை 11வர் அணிக்கு தெரிவாகும் வரையும் சகலவிதமான விளையாட்டு உபகரணங்களையும், சலுகைகளையும் பெற்றுத் தருவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அவர் கருத்து தெரிவிக்கையில் வெளிநாடு வாழ் இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் விளையாட்டு துறையில் மிளிரும் அனைத்து மாணவர்களுக்கும் உதவிகளை செய்ய ஆர்வமாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு இச்சாதனை மாணவனுக்கு கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான விநாயகமூர்த்தி ஜனகனும் ஒரு வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.