7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கே.கே.ஆர்
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தார். இவருடன் ஆரம்ப வீரராக களமிறங்கிய அணி தலைவர் போப் டு பிளெசிஸ் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து 183 ஓட்டங்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு, பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 30 மற்றும் 47 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயஸ் அய்யர் 24 பந்துகளில் 39 ஓட்டங்களை குவிக்க கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ஓட்டங்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் வைசாக், யாஷ் தயால் மற்றும் மயான்க் டாகர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.