இலங்கையை அதிக விக்கெட் எண்ணிக்கையில் வீழ்த்தி அரையிறுத்திக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து!
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41ஆவது போட்டி இன்று (09) இடம்பெற்றது.
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களையும், மகீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில், நியூஸிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 37 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக, டெவோன் கொன்வே 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் அஞ்சலோ மெத்யூஸ் 29 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.