ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல் - 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு

ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்  - 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு

ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது.

சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும் 47 புலம்பெயர்ந்தோர் காயமடைந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஹவுத்திகளின் அல் மசிரா அலைவரிசை தெரிவித்துள்ளது.

அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

மார்ச் 15 அன்று ஹவுத்திகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதிலிருந்து, அமெரிக்க மத்திய கட்டளைப் படைகள் 800க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்தது.