Trump Hotel-லுக்கு அருகில் வெடித்த எலான் மஸ்கின் தயாரிப்பு!
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான நட்சத்திர விருந்தகத்துக்கு அருகே டெஸ்லா சைபட்ரக் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இந்த மாதம் 20ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் லாஸ் வேகாஸ் நகரில் அவரது ட்ரம்ப் சர்வதேச விருந்தகத்துக்கு வெளியே எலெக்ட்ரிக் கார் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயர் தொழில்நுட்பம் கொண்ட அந்த கார் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
https://x.com/i/status/1874539455803236576
கார் வெடித்து சிதறியதால் அதற்குள் இருந்த சாரதி உயிரிழந்துள்ளதுடன், அருகில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடித்த சைபர் டிராக் ரகமான பேட்டரி எலெக்ட்ரிக் கார், தொழில் அதிபரும் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளருமான எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவின் தயாரிப்பாகும்.
முன்னதாக, நேற்றைய தினம் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஹார்லியன்ஸ் நகரில் உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கூட்டத்திற்குள் காரை மோதவிட்டு 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எனவே இது தீவிரவாத தாக்குதலா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு (FBI) விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள டெஸ்லா நிறுவுனர் எலான் மஸ்க் - 'குறித்த வாடகைக்கு அமர்த்தப்பட்ட சைபர்ட்ரக் வாகனத்தின் அடித்தளத்தில் பெருமளவு வெடிபொருட்கள் அல்லது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும், குறித்த வாகனம் தானாகவே வெடிக்கக் கூடிய தன்மை கொண்டது அல்ல என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் எந்தவகையான வாகனமாக இருந்தாலும் அது வெடிக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.
டெஸ்லாவின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பை நாம் வௌியிடுவோம்..
இவ்வாறான வெடிப்புகளை எமது டெஸ்லா வாகனங்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை என்பது உறுதி' என எலான் மஸ்க் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.