IPL 2025; மும்பையை வீழ்த்தி குஜராத் பட்டியலில் முதலிடம்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (07) நடைபெற்ற பரபரப்பான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி, டக்வொர்த் லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறையில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வானிலை இடையூறுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி, இறுதிப் பந்து வரை நீடித்தது, குஜராத் அணி 147 என்ற திருத்தப்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் துரத்தியது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற GT அணியானது முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த MI அணியானது ஆட்டத்தில் வேகத்தை அதிகரிக்கத் திணறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்த இன்னிங்ஸில் வில் ஜாக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே மூன்றாவது விக்கெட்டுக்கு மதிப்புமிக்க இணைப்பாட்டம் கிடைத்தது.
இருவரும் 71 ஓட்டங்கள் சேர்த்தனர். ஜாக்ஸ் அதிகபட்சமாக 35 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்தார். சூர்யகுமார் 24 பந்துகளில் 35 ஓட்டங்களை எடுத்தார்.
அவர்களுக்கு அடுத்த படியாக கார்பின் போஷ் 22 பந்துகளில் 27 ஓட்டங்களை எடுத்து சில முக்கியமான ஓட்டங்களை சேர்த்து, மும்பை அணிக்கு போட்டித்தன்மை வாய்ந்த ஓட்ட இலக்கினை பெற உதவினார்.
குஜராத்தைப் பொறுத்தவரை இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் சிறப்பான பந்து வீச்சாளராக இருந்தார்.
அவர் தனது நான்கு ஓவர்களில் 34 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் துரத்தல் இரண்டு மழை தாமதங்களால் தடைபட்டது.
இதையடுத்து மழை நின்ற உடன் DLS முறையின் கீழ் 19 ஓவரில் 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றிபெற கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இறுதியில் 19 ஆவது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ஓட்டங்களை சேர்த்தது.
இதன் மூலம் DLS முறைப்படி மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் டைட்டன்ஸ் திரிலர் வெற்றிபெற்றது.
இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் முதல் இடம் பிடித்துள்ளது.
சேஸிங்கில் அழுத்தம் இருந்த போதிலும், அணித் தலைவர் ஷுப்மான் கில் 46 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்து இன்னிங்ஸை நிலைநிறுத்தினார்.
மும்பை அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.