செங்கடலில் அதிகரித்துள்ள போர் பதற்றம் : சரக்கு கப்பல் மீது தொடர் தாக்குதல்!

செங்கடலில் அதிகரித்துள்ள போர் பதற்றம் : சரக்கு கப்பல் மீது தொடர் தாக்குதல்!

செங்கடல் வழியாக சென்ற ஒரு சரக்கு கப்பல் மீது இன்று(21)தொடர்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலினால் கப்பல் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், கப்பல் மாலுமிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மிதந்துகொண்டிருப்பதாகவும் பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது. 

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுக நகரமான ஹொடைடாவுக்கு மேற்கே 140 கிலோ மீட்டர் (90 மைல்) தொலைவில் தாக்குதல் நடந்துள்ளது என்றும், சிறிய படகுகளில் வந்தவர்கள் முதலில் சிறிய ரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பிரித்தானிய இராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் அறிவித்துள்ளது. 

மேலும், நான்கு எறிகணைகளும் கப்பலைத் தாக்கியதாக கூறி உள்ளது.ஆனால் ட்ரோன்களா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாக தெரியவில்லை.

கப்பல் அனைத்து சக்தியையும் இழந்திருக்கலாம் என்றும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு இல்லை, மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்' என்றும் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் கூறி உள்ளது.

இந்த தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், ஹவுதி தரப்பில் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.