அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் யுக்ரைனுக்கு திடீர் பயணம்!
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அண்டனி பிளிங்கன் இன்று (06) யுக்ரைனுக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அண்டனி பிளிங்கன் இன்று (06) யுக்ரைனுக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை பயணத்தின் போது ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியுள்ள போர்க்கால உதவியின் புதிய தொகுப்பை அறிவிப்பார் என்று வெளியுறவுத்துறை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன், ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் அவர் சந்திக்க உள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்யா மீதான எதிர்த்தாக்குதல் தொடங்கியதில் இருந்து கியேவுக்குச் சென்ற முதல் அமெரிக்க உயர் அதிகாரி அன்டனி பிளிங்கன் ஆவார்.
தமது பங்காளிகள் ஒரு வலுவான பொருளாதாரம், வலுவான ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கும் அதன்போது அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதிலும் உறுதியாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் இதுவரை 43 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ உதவிகளை யுக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்டனி பிளிங்கனின் யுக்ரைன் விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், கியேவிற்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள், ரஷ்யாவின் விசேட இராணுவ நடவடிக்கையின் போக்கை பாதிக்காது என கூறியுள்ளார்.