இலங்கையில் அதிகரிக்கப் போகும் இந்திய முதலீடுகள் : லோக்சபாவில் பரிந்துரை

இலங்கையில் பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய லோக்சபாவின் வெளிவிவகார குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கையில் அதிகரிக்கப் போகும்  இந்திய முதலீடுகள் : லோக்சபாவில் பரிந்துரை

கடன்கள் மற்றும் நிதிவிடயங்களை கையாளும் போது, இலங்கைக்கு அதிகளவான நன்மைகள் கிடைக்கும் வகையில் செயல்படுமாறும் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

“அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை“ என்ற இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கு அமையவே இந்த சிபாரிசுகளை, லோக்சபாவின் வெளிவிவகார குழு, லோக்சபாவில் முன்வைத்துள்ளது.

2021ஆம் ஆண்டு இலங்கையில் பாரிய நேரடி முதலீடுகளை மேற்கொண்ட நாடாக இந்தியா திகழ்வதுடன் குறித்த ஆண்டில் 142 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளதாகவும் வெளிவிவகார குழு கூறியுள்ளது.

எரிசக்தி, மின்சக்தி, மீள் உருவாக்க சக்தி, துறைமுகங்கள் அபிவிருத்தி, மற்றும் உற்பத்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் கடன்கள் தொடர்பிலான விடயங்களில் இந்தியாவின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது என்றும் இக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கான கடன் திட்டங்களை பெற்றுக்கொள்ளும் செயல்பாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் இந்தியா உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அந்த குழு முன்மொழிந்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதானி குழுமத்தின் பிரதானிகளுக்கும் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ,

இலங்கையில் அதானி குழுமம் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 21ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கையில் அதிகளவான முதலீடுகளை மேற்கொள்வதற்கான அழைப்புகளையும் பிரதமர் மோடி விடுத்திருந்தார்.

அதேபோன்று, இலங்கையில் இந்திய நாணயத்தின் பாவனையை அதிகரிப்பதன் ஊடாக இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவாக்குவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.