வடக்கு மாகாணத்தில் விரும்பத்தகாத செயல்கள் - மாணவர்களும் ஈடுபடுவது வேதனையளிக்கிறது!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் உரையை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வரவேற்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், வடக்கு மாகாணத்தில் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. 

வடக்கு மாகாணத்தில் விரும்பத்தகாத செயல்கள் - மாணவர்களும் ஈடுபடுவது வேதனையளிக்கிறது!

இச்செயல்களில் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருப்பது வேதனையான விடயம். பல பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மிகவும் பொறுப்போடு மாணவர்களை வழிப்படுத்துகின்றார்கள். 

ஆனால் மாணவர்கள் வாழ்கின்ற சூழல் அவர்களை சுற்றியுள்ள சமூகமே அவர்களை விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட வைக்கிறது.

இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த பெற்றோர்களும் சமூகத்தில் உள்ளவர்களும் பொறுப்புணர்ச்சியுடன் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பதோடு நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்ற நல் நோக்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர்  பி.எஸ்.எம். சாள்ஸ் கூறியிருந்தார்.

இன்று (27) வடமராட்சி கிழக்கு குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அதிபர்களும் ஆசிரியர்களும் மிகவும் கஷ்டப்பட்டு மாணவர்களை வழிப்படுத்துகின்றார்கள் என்பதனை இப்பாடசாலையில் இன்று நடைபெற்ற அனைத்துச் செயற்பாடுகளும் சாட்சியாக அமைகின்றன. 

ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மாணவர்களின் உயர்வான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. 

அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர பாடுபடுகின்றார்கள் என்பதை நான் காண்கின்றேன். 

ஆனால் மாணவர்கள் வழிமாறிச் செல்கின்ற போது அதிபர்கள் ஆசிரியர்கள் மனதில் விரக்தி ஏற்படுகின்றது. 

இதனை பெற்றோரும் சமூகத்தில் உள்ளவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய மாறுதலுக்கு மாணவர்களை சுற்றியுள்ள சமூகமும் அவர்கள் வாழும் சூழலுமே  காரணமாக அமைகின்றது.

ஆகையால் அனைவரும் சமூகப் பொறுப்போடு நடந்து கொண்டு வடக்கு மாகாணத்தை கல்வியிலும் பண்பாட்டிலும் உயர்ந்ததாகக் கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இத்தகைய ஆளுநரின் உரையை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது. 

அதிபர் ஆசிரியர்கள் உயர்வான எண்ணங்களுடன் கடமை ஆற்றுகின்றார்கள் என்பதனை வடமாகாண ஆளுநர் புரிந்து கொண்டது போல ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது - என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.