கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினையில் சகல முஸ்லிம் தலைவர்களும் மௌனம் காப்பது ஆபத்தானது - கிழக்கிலங்கை ஜனநாயக இளைஞர்கள் அமைப்பு!

கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினையில் சகல முஸ்லிம் தலைவர்களும்  மௌனம் காப்பது ஆபத்தானது - கிழக்கிலங்கை ஜனநாயக இளைஞர்கள் அமைப்பு!

இலங்கை வாழ் சிங்கள மக்களுக்கு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பல நகரங்கள் இருப்பது போன்று தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு போன்ற பல நகரங்கள் இருக்கின்றன.

ஆனால் முஸ்லிங்களுக்கு இருக்கும் ஒரே நகரம் கல்முனை. 

இதனையும் பறித்தெடுக்க பலநூறு சதித் திட்டங்களை நாட்டின் உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயும் பலரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் முஸ்லிங்களின் காங்கிரஸ் தலைவர்கள் மூவர் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் கோமாவில் இருப்பது இலங்கை முஸ்லிங்களினதும், கல்முனை முஸ்லிங்களினதும் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என கிழக்கிலங்கை ஜனநாயக இளைஞர்கள் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் காலத்திலிருந்து தோற்றம் பெற்ற கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் ஒரு முடிவை பெற முடியாதவாறு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இதனை பிச்சைக்காரனின் புண்ணை போல வைத்திருக்கவும், அம்பாறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெறவும் காலாகாலமாக இந்த விடயத்தையே பயன்படுத்தி வருகிறார்கள். 

அரசியல் ஆதாயம் தேட முனையும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த பிரச்சினையை தீர்க்க எண்ணமில்லை. 

இதனால் அரச நிர்வாகத்தையும் சீரழித்து, முஸ்லிம் அரசியல்வாதிகளினால் கல்முனைக்கு கொண்டுவரப்படும் அபிவிருத்தியையும் வெற்றுக்கோஷங்களை எழுப்பி தடுத்து நிறுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இந்த பிரச்சினையை கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் தனிப்பட்ட பிரச்சினை போன்ற விம்பம் கட்டியெழுப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் வழக்கையும் அவர்களே தாக்கல் செய்து வைத்துவிட்டு அவை நிலுவையில் இருக்கும் போதே இப்போது ஒருமாதமளவில் போலியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேச அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும், எதிர்கால அரசியல்வாதிகளும், வெளிநாட்டுக்கு தஞ்சம் கோர எண்ணுபவர்களும் கல்முனை மக்களை வைத்து அரசியல் நாடகம் நடத்த இந்த பிரச்சினையை தூக்கி பிடிக்கிறார்கள். 

இவற்றை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக முறையான எல்லை நிர்ணயத்தை செய்து யாருக்கும் பங்கம் ஏற்படாத வண்ணம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது இரு செயலகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு முஸ்லிம் பிரதேச செயலாளரும், தமிழ் பேசும் உப பிரதேச செயலாளரும் நியமிக்கப்பட வேண்டும். 

இந்த நிலை நீடித்தால் தமக்கு ஏற்படும் அநீதிகளை பொறுத்துக் கொண்டு தமிழ் மக்களுடன் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன் வாழும் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, மத்தியமுகாம், கொலனி மக்களும் தமக்கான தனியான செயலகம் அல்லது முஸ்லிம் உப பிரதேச செயலாளரை கோரும் நிலை ஏற்படும். 

அதே கோரிக்கையை இதே விட்டுக்கொடுப்புக்களுடன் வாழும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களும் முன்வைக்க பலரும் முன்வருவார்கள். 

இது நாட்டின் இறையாண்மையை எதிர்காலத்தில் கேள்விக்குட்படுத்தும். ஆகையால் இந்த பிரச்சினையை தீர்க்க ஏ.எல்.எம்.அதாஉல்லா, அப்துல் ரவூப் ஹிபதுல் ஹக்கீம், அப்துல் றிசாத் பதியுதீன் போன்ற தலைவர்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து தமிழ் தலைவர்கள், அரச உயர்மட்டங்களுடன் பேசி உடனடியாக ஒரு தீர்வை பெற முனைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.