சீனாவில் கனமழையால் மண்சரிவு - 15 போ் பலி!
ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரிலுள்ள யூலின் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கிய ஒரே வீட்டைச் சேர்ந்த 18 போ் மண்ணில் புதைந்தனா்.
கிராமத்தையொட்டிய மலையில் ஏற்பட்டத் திடீா் வெள்ளம் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த 300-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளா்கள், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த மண்சரிவில் 15 போ் உயிரிழந்ததாகவும், 6 போ் காயமடைந்ததாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வடக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் திடீா் வெள்ளப்பெருக்குடன், இந்தக் கோடைக்காலத்தில் கடுமையான வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில், கெய்மி புயல் கடந்த வாரம் சீனாவில் கரையைக் கடந்தது.
கெய்மி புயல் ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்த நிலையிலும், அதன் தாக்கத்தால் ஏற்கெனவே வெள்ளநீா் சூழ்ந்துள்ள நகரங்களில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.