உலக சாதனைக்கு தயாராகும் ஒப்பனைக் கலைஞர்கள்!
எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஒப்பனைக் கலைஞர்களால் ஓர் உலக சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட இருக்கின்றது.
கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும் இலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் முன்னணி ஒப்பனைக் கலைஞர்களும் பயிற்சி பெற்ற ஒப்பனைக் கலைஞர்களும் மொடலிங் துறையைச் சேர்ந்த கலைஞர்களும் ஒன்று சேர்ந்து இந்த உலக சாதனையை நிகழ்த்த உள்ளனர்.
இந்த உலக சாதனை தொடர்பான தெளிவூட்டல் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பிலுள்ள சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் தலைமையகத்தில் அதன் தலைவர் அனு குமரேசனால் நடாத்தப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அனு குமரேசன்...
பல உலக சாதனை பதிவு நிறுவனங்களின் அனுசரணை பெற்ற ஐக்கிய அமேரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, வியட்நாம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் அங்கீகாரம் பெற்ற "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" இன் சாதனைப் புத்தகத்தில் எமது ஒப்பனைக் கலைஞர்களின் உலக சாதனையை பதிவு செய்ய சகல ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம்.
அத்துடன் 250ற்கும் மேற்பட்ட ஒப்பனை நிகழ்வுகள் குறிப்பிட்ட நேர அடிப்படையில் ஒப்பனைக் கலைஞர்களால் பிரமாண்டமான சாதனையாக நிகழ்த்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் தொழில் வல்லுநர்களான ஒப்பனை கலைஞர்களும் இவர்களோடு வெளிநாட்டைச் சேர்ந்த ஒப்பனை கலைஞர்களும் ஒப்பனை ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளதுடன் விசேடமாக 17 வயதிற்குட்பட்ட மாணவர்களையும் உள்வாங்கி இந்த சாதனையை நிகழ்த்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சாதனை நிகழ்வை சாதனைப் புத்தகத்தின் நடுவர்கள் நேரடியாக கண்காணிப்பதோடு இணைய வழியூடாகவும் நிகழ்நிலை நேரலையூடாகவும் பதிவுகளை மேற்கொள்ளவுள்ளதோடு பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் நேரடியாகவும் நிகழ்நிலையூடாகவும் கலந்துகொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.
மேலும் இந்த சாதனைக்கான சான்றிதழும் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் அன்றைய தினமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.