பாடசாலையில் விலகும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லங்களை பார்வையிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், ”சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள் என்பவற்றுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், 500 மில்லியன் ரூபாய் இதன் வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும், மனிதவளத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அபிவிருத்திக்காகவும், அவர்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மாணவர்களுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு, சப்பாத்து வவுச்சர், பாடநூல், சீருடை, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் அங்கி என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி பாடசாலையில் இருந்து பொருளாதார சுமை காரணமாக இடை விலக முடியாத வகையில் அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதாகவும், கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமருடனும் இது தொடர்பில் பேசியுள்ளதாகவும்
இடைவிலகளுக்கு பின் சிறுவயது திருமணங்கள், சிறு வயது விவாகரத்து தொடர்பிலும் கவனம் செலுத்தி அவர்களுக்கான ஒரு கல்வியை வழங்குவது தொடர்பிலும் தாம் ஆலோசித்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.