நமீபிய வீரர் அதிரடி! - டி20 போட்டிகளில் அதிவேக சதம்!
நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் நமீபியா அணியின் லோஃப்டி-ஈடன் (Loftie-Eaton) அதிரடியாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் 33 பந்துகளில் லோஃப்டி-ஈடன் பெற்ற சதம் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பெறப்பட்ட அதிவேக சதமாக பதிவாகியுள்ளது.
36 பந்துகளை எதிர்கொண்ட லோஃப்டி-ஈடன் 11 நான்கு ஓட்டங்கள் மற்றும் 08 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக குறித்த அதிவேக சதத்தை கடந்தார்.
முன்னதாக நேபாளம் அணியின் குஷால் மல்லா 34 பந்துகளில் அதிவேக சதத்தை கடந்திருந்த நிலையில் அவரது சாதனையை லோஃப்டி-ஈடன் முறியடித்துள்ளார்.
இந்தநிலையில் 207 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியுள்ளது.