நேட்டோவுடன் போரிட நேரிடும் - ரஷ்யா எச்சரிக்கை

நேட்டோவுடன் போரிட நேரிடும் - ரஷ்யா எச்சரிக்கை

நேட்டோவுடன் போரிட நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் யுக்ரைனில் போரிடுவதற்காக தங்களது துருப்புக்களை அனுப்பினால் தமது படையினருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணிக்கும் இடையேயான மோதலை தவிர்க்க முடியாது என ரஷ்யா அறிவித்துள்ளது

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான நேரடி மோதலின் ஆபத்துகள் குறித்து முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நேற்றைய தினம் ஐரோப்பிய நாடுகளின் துருப்புக்களை யுக்ரைனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தார்.

எனினும், இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகளிடையே ஒருமித்த கருத்து இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் செய்தியாளர் ஒருவர் வினவியபோது, நேட்டோவுடன் ரஷ்யா போரிடுவதை தவிர்க்க முடியாது என அவர் பதிலளித்துள்ளார்.

இந்தநிலையில், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதல் மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.