கட்டுநாயக்க - கொழும்பு, மாக்கும்பற புதிய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பின் (Colombo) பல முக்கிய பகுதிகளுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு விமான நிலைய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம், விமான நிலைய - கோட்டை பேருந்து ஊழியர் சங்கத்தினரால் நேற்று (16.07.2024) நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை வழங்க முடியாது எனவும் புதிய பேருந்துகளுக்கும் இது பொருந்தும் எனவும் சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது தொழிற்சங்கத்தின் கீழ் 71 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இந்திக குணசேகர, 42 பேருந்துகள் நாளாந்தம் இயங்குவதில்லை என்றும், மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது ஒன்றியம் இதற்கு முன்னர் விமான நிலைய பேருந்து சேவையை ஆரம்பித்திருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இடைநிறுத்தப்பட்டதாக இந்திக குணசேகர கூறியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த பேருந்துகள் தேவையில்லை என மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியதாக கூறிய இந்திக குணசேகர, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து புதிய பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
உண்மையான தேவை இருப்பின் தற்போது ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நாளாந்தம் இயங்காத 42 பேருந்துகளை புதிய சேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என விமான நிலைய – கோட்டை பேருந்து ஊழியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.