24 ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் தெரிவு!
பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, இரண்டாவது முறையாகவும் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி இடம்பெற்றது.
அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர்.
நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் முஸ்லீக் நவாஸ் கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்தது.
அந்த கட்சியின் வேட்பாளர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
இம்ரான் கானின் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் முன்னிறுத்தப்பட்டார்.
இந்தநிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்ற இன்று கூடியதுடன், அதற்கான வாக்குப்பதிவும் இடம்பெற்றது.
அதில் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று, இரண்டாவது முறையாகவும் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவானார்.
ஒமர் அயூப் கான் 92 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.