யுக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி பல மில்லியன் டொலர் ஈட்டியமையை மறுத்த பாகிஸ்தான்!
யுக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காக இரண்டு அமெரிக்க நிறுவனங்களுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் மூலம் 364 மில்லியன் அமெரிக்க டொலர்களை பாகிஸ்தான் ஈட்டியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளமான நூர் கானில் இருந்து விமானமொன்று சைப்ரஸின் அக்ரோதிரியில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளத்துக்கும், பின்னர் ருமேனியாவுக்கும் என மொத்தமாக ஐந்து முறை பயணித்து, யுக்ரைனுக்கான ஆயுதங்களை வழங்கியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், யுக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை விற்பனை செய்துள்ளதாக வெளியாகும் தகவல்களை இஸ்லாமாபாத்தில் உள்ள அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சின் அலுவலகம் மறுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் பாகிஸ்தான் நடுநிலை கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அந்த சூழலில் யுக்ரைனுக்கு ஆயுதங்களையோ வெடிபொருட்களையோ வழங்கவில்லை எனவும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.