தேசபந்து தென்னகோனுக்கு எதிரான - அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
தேசபந்து தென்னகோன் இலங்கையின் காவல்துறை மா அதிபராக செயற்படுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இலங்கை காவல்துறை படையில் எந்தவொரு பதவியையும் வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன் இணைந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அழைப்பாளர் நிரோசன் பாதுக்க மற்றும் குழு உறுப்பினர் ஆனந்த பாலித ஆகியோர் தமது மனுவில் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பெயரிட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஜனாதிபதியினால் தேசபந்து தென்னகோன் காவல்துறை அதிபராக நியமிக்கப்பட்டமை,சட்ட விதிகளுக்கு முரணானது மற்றும் அரசியலமைப்பு விதிகளை மீறும் செயலாகும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.