கோர விபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு டிஃபென்டர் - 4 பேர் காயம்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று தலாவ பிரதேசத்தில் இன்று (1) அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்படி விபத்தில் காயமடைந்தவர்கள் அவர்களுடன் வந்த மற்றுமொரு வாகனம் மூலம் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில், சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் எனவும், ஏனையவர்கள் இலங்கை காவல்துறையில் கடமையாற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.