தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய கூட்டணி அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (23) சமர்ப்பித்தது.
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரவு செலவுத் திட்டம், வேலைவாய்ப்பு, பயிற்சி, சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறது என்றும் அவர் கூறினார்.
அதன்படி, இந்த ஆண்டு இந்திய வரவு செலவு திட்டத்தில் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடான இந்தியா, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக இதனை மேற்கொண்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 6% ஆக இந்தியா குறைத்திருப்பது இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்கனவே குறைந்துள்ளதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.