அம்பாறையில் நிராகரிக்கப்பட்ட ஹர்த்தால் - ஏனைய பகுதிகளில் ஒத்துழைப்பு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் கட்சிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் நிர்வாக முடக்கல் மற்றும் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டது.
எனினும், அம்பாறை மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் நிர்வாக முடக்கல் போராட்டம் நிராகரிக்கப்பட்ட நிலையில், வர்த்தக செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்திய முகாம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (20) உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது.
இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு , சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாடுகள் இடம்பெற்றன.
நீதிபதி மீதான அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நிர்வாக முடக்கப் போராட்டத்திற்கு வவுனியாவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.
அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக இருந்தது.
இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றதுடன், தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தமையை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை பாடசாலைகளில் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றமையால் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றன.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகளும் விலகியிருந்தனர்.
மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான நெடுங்கேணி, செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
இதனிடையே, தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் நிர்வாக போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.
தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.
இதனிடையே, தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரபல பொதுச்சந்தை மற்றும் அதனோடிணைந்த அனைத்து வர்த்தக நிலையங்களும், முற்றாக இயங்காமல் மூடப்பட்டுள்ளன.
பிரதான வீதிகளில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள், தங்க ஆபரண விற்பனை நிலையங்கள், சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட அனைத்தும் இயங்கவில்லை என செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்களும், வங்கிகளும் திறக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்ள செல்வது மிக அரிதாகவே உள்ளது.
களுவாஞ்சிகுடி வைத்தியசாலை செயற்பாடுகள் வழமைபோன்று இயங்கிவருவதுடன், தமது தேவைகளின் நிமிர்த்தம் முச்சக்கர வண்டி சாரதிகளும், ஒரு சில பொதுமக்களும் நடமாடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
வாழைச்சேனையில் இன்று கடையடைப்பு மற்றும் நிர்வாக முடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மீன் சந்தைகள், மரக்கறி மற்றும் பழக்கடைகள் என்பன திறந்து காணப்பட்டன.
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் இணைந்து வாழைச்சேனையில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் இயங்கியதுடன், அரச, தனியார் வங்கிகள், மருந்தகங்கள், உணவகங்கள் என்பன திறந்திருந்தன.
அரச நிறுவனங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலும் பொதுச் சேவை போக்குவரத்துகள் மாத்திரம் இடம்பெறுவதுடன், தனியார் துறை சார்ந்த செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.