பேருந்து கட்டணம் மற்றும் ஏனைய போக்குவரத்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம்?

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய, நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து பயண கட்டணத்தை 4.01 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் மற்றும் ஏனைய போக்குவரத்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம்?

எனினும், ஆரம்ப பேருந்து பயண கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ஆரம்ப பேருந்து பயண கட்டணமாக 30 ரூபா தொடர்ந்தும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலை அடுத்து விடுக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு போக்குவரத்து அமைச்சு அனுமதியளித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை கொண்டு செல்லும் கொள்கலன் தாங்கி ஊர்திகளுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த கட்டணம் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களை மேலும் அசௌகரியப்படுத்தக் கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எனவே, அதனை கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.