பிரான்ஸில் 150 பேர் கைது - சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமையைஎதிர்த்து தொடர் போராட்டம்!
பிரான்ஸில் பொலிஸ் தடையை மீறி பிரவேசித்ததாக கூறப்படும் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, சுமார் 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் பொலிஸ் தடையை மீறி பிரவேசித்ததாக கூறப்படும் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, சுமார் 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் அரைவாசிப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் கெரல்ட் டர்மென் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் தடையினை மீறி பிரவேசித்தாக கூறப்படும் 17 வயது சிறுவன், பிரான்ஸின் தலைநகர் பரிஸில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில், இந்த கைது இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பல பொலிஸ் நிலையங்களுக்கும், பாதுகாப்பு வாகனங்களுக்கும் பொதுமக்கள் தீயிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எந்த காரணத்தையும் கூறி, சிறுவனின் மரணத்தை நியாயப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பான வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.