ஜப்பானில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்!
ஜப்பான் - ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர ஆறு ஒன்று திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது. அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் ஒன்றில் இந்த கசிவு தொடங்கியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் - ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர ஆறு ஒன்று திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் ஒன்றில் இந்த கசிவு தொடங்கியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பியர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை” என குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், இந்த சம்பவத்தால் பொது மக்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், "எங்கள் தொழிற்சாலை வசதிகளை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் நீரில், உணவு சுகாதாரச் சட்டத்தின் அமுலாக்க விதிமுறைகளில் பட்டியலிடப்பட்டுள்ள புரோபிலீன் கிளைகோல் எனப்படும் உணவு சேர்க்கைக்கான பொருள் இருக்கிறது.
குளிர்விக்கும் நீரில் உள்ள அது கசிந்ததும், அந்த நீர், மழைநீர் வடிகாலின் வழியாக ஆற்றில் கலந்து ஆற்று நீர் சிவப்பு நிறமாக மாறி விட்டது" என அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற இன்னுமொரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.