சாந்தன் என்கிற சுதேந்திரராஜா 32 வருட சிறைவாசத்திற்குப் பின் விடுதலையாகி நாடு திரும்ப இலங்கை அனுமதி!

சாந்தன் என்கிற சுதேந்திரராஜா 32 வருட சிறைவாசத்திற்குப் பின் விடுதலையாகி நாடு திரும்ப இலங்கை அனுமதி!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தன் என்கிற சுதேந்திரராஜா 32 வருட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகி நாடு திரும்ப இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இதன்படி சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகம் சாந்தனுக்கு இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மட்டும் தற்காலிக கடவுச்சீட்டை வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளில் ஒருவரான சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா 32 ஆண்டுகள் சிறைக்கு பின்னர் 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனுக்கு சென்னையில் உள்ள இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகரகம் தற்காலிக பயண ஆவணத்தை வழங்கியுள்ளதாக சென்னை மேல் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான சாந்தன் என்கிற டி.சுதேந்திரராஜா, திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து தன்னை விடுவித்து இலங்கைக்கு அனுப்பக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது மாநில அரசு நீதிமன்றத்தில் இதனை அறிவித்தது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளாக தண்டனைப்பெற்ற நளினி மற்றும் ஸ்ரீஹரன் என்கிற முருகன் ஆகியோர், தங்களை லண்டனில் உள்ள தங்கள் மகளிடம் செல்ல அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

2022 நவம்பரில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழக அரசு, குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தண்டனைக்கு உள்ளான பேரறிவாளனை உயர் நீதிமன்றம் ஏற்கனவே விடுதலை செய்தது.