தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

பொலனறுவை - மனம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனம்பிடிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரே நேற்று இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தேவாலயத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் பாதைக்கு சென்று இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவாலயத்தின் பாதிரியாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.