இந்திய மீனவர்களின் அத்துமீறலை எடுத்துரைப்போம் - யாழ் மீனவ சம்மேளம்!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தாங்கள் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எடுத்துரைப்போம் - யாழ் மீனவ சம்மேளம்!

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்திய நிதியமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக பத்திரிக்கை செய்திகளில் அறிந்து கொண்டோம். அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும் அறிகின்றோம். 

அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்து இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் வடக்கு கடற்றொழிலாளர்களாகிய நாங்கள் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார பிரச்சினைகளையும், எங்கள் வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும், அவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கின்றோம்.

ஏற்கனவே தமிழகத்துக்கு சென்று தமிழக தலைவர்களிடம் எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூற தயாராகி வருகின்றோம். 

அதற்குத் தேவையான பணத்தை சேகரிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 

இந்திய நிதியமைச்சர் யாழ்ப்பாணம் வராவிடின் கொழும்புக்கு சென்றாவது அவருடன் தொடர்பு கொண்டு அவரை சந்தித்து இது விடயமாக மகஜர் ஒன்றை கையளிக்க இருக்கின்றோம். 

கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அது தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய மாதிரி வரைபு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் அல்லது புதிய சட்டம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடியுள்ளோம்.

தற்போது வெளியாகியுள்ள முன் வரைவை படித்து எங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு அவர் கேட்டிருக்கின்றார்” என்று குறிப்பிட்டார்.