ஓட்டமாவடியில் புகையிரதக் கடவையில் தனி ஒருவராக அமைதிப் போராட்டம்!
ஓட்டமாவடி பிரதான வீதியின் அருகே உள்ள புகையிரதக் கடவையில் சம்மூன் எனும் நபர் தனி ஒருவராக அமைதிப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டார்.
குறித்த விடயம் தொடர்பாக அவரிடம் கேட்டறிந்த போது இந்த புகையிரதக் கடவை மிக மோசமான முறையில் பழுதடைந்துள்ளதன் காரணமாக இதனைக் கடந்து செல்வது மிகச் சிரமமாக உள்ளதாகவும் இதன் மூலம் பல விபத்துக்களும் தொடர்தேச்சியாக நடைபெறுவதாகவும் கூறினார்.
அத்தோடு குறித்த கடவைக்கு தான் இரண்டு முறை மண் மற்றும் கிரவல் இட்டு தற்காலிகமாக புனரமைப்புச் செய்த போதிலும் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாக அதுவும் தற்பொழுது சேதமடைந்து காணப்படுவதாக கவலை தெரிவித்தார்.
அதிகமானவர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடு பட்டிருந்த இந்த சகோதரருக்கு ஆதரவாக அவ்விடத்தில் நின்றதுடன் பலரும் இந்தக் கடவையை புனரமைப்புச் செய்து தருமாறு வேண்டிக்கொண்டனர்.
குறித்த போராட்ட இடத்திற்கு வாழைச்சேனை பொலிசார் வருகை தந்ததுடன் வாகன நெரிசல்கள் ஏற்படாதவாறு செயற்பட்டனர்.
அத்தோடு ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நவ்பர் CC யும் பிரதேச செயலக அவிவிருத்தி உத்தியோகத்தர் றியாஸ் ADP யும் வருகை தந்ததுடன் குறித்த விடயம் தொடர்பாக பேசி விரைவில் அது தொடர்பான அனுமதியைப் பெற்று திருத்தம் செய்வதாகவும் கூறியதோடு குறித்த அமைதிப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.