பீடி உற்பத்தியாளர்களின் நட்டமடைந்த வருவாயை மீளப்பெற விசேட திட்டம்!

பீடி உற்பத்தியாளர்களின் நட்டமடைந்த வருவாயை மீளப்பெற விசேட திட்டம்!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு பீடி சுற்றும் இலைகள் இறக்குமதி செய்யப்பட்டமையின் ஊடாக நட்டமடைந்த 4 பில்லியன் ரூபாய் வரி வருவாயை மீளப்பெறுவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பீடி உற்பத்தியாளர்களுடன் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டரீதியாக இறக்குமதி செய்யப்படும் பீடி சுற்றும் இலைகளை விட அதிகமான பீடி சுற்றும் இலைகள் சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி சுற்றும் இலைகளின் அளவு 323,389 கிலோகிராம் என சுட்டிக்காட்டிய அவர், அனைத்து வரிகளும் அறவிடப்பட்டதன் பின்னர் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் சுமார் 3 பில்லியன் ரூபாயாகும் என தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டில் சுமார் 15 லட்சம் கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் புழக்கத்தில் இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வரியைக் குறைப்பதன் மூலம் சட்டவிரோத பீடி சுற்றும் இலைகளின் இறக்குமதியை குறைக்க முடியும் எனவும் அதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அரசாங்கத்தின் வரி வருவாயை 7 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.