முட்டையை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம்
முட்டையொன்று 30 ரூபாய் விற்பனை செய்யப்படாவிட்டால், விநியோகத்துக்காக கொண்டு செல்ல முடியாது!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டையொன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படாவிட்டால், விநியோகத்துக்காக அதனை கொண்டு செல்ல முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டைக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த உச்சபட்ச சில்லறை விலையை நீக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உச்சபட்ச சில்லறை விலையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் 15 நாட்களுக்குள் சந்தையில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டை குறைக்க முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, எதிர்காலத்தில் உச்சபட்ச சில்லறை விலையை நீக்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதற்கு வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.