இந்தியாவும், இலங்கையும் திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்த முஸ்தீபு!

இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு (21) நாடு திரும்பினார்.

அவர்  இந்திய பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் கௌதம் அதானி ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பில், பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

அதன்பின்னர், இருவரும் கூட்டு ஊடக சந்திப்பை நடத்திய போது, கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கம், 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தி, மாகாண சபை தேர்தலை நடத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன்கருதி, 75 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இதேவேளை, இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடல் மற்றும் வான்வழி இணைப்பு, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இணைப்புகள், வர்த்தகம், பொருளாதார மற்றும் நிதி ரீதியான தொடர்புகள் என்பன தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையினை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தினை விஸ்தரிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஸ்தாபித்தல் குறித்த ஆய்வுகளை விரைவில் ஆரம்பிக்கவும் இதன்போது தீர்மதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவும், இலங்கையும் திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான இணக்கம் ஏற்பட்டது.

இதன்படி, இலங்கையில் உள்ள திருகோணமலை நகரை ஒரு பிராந்திய மையமாக மேம்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.