இலங்கையின் செவ்விளநீர் ஏற்றுமதி சிறப்பான அதிகரிப்பு!
2023 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத நிறைவு வரையான காலப்பகுதியில் செவ்விளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச சந்தையில் செவ்விளநீருக்கு நிலவும் கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தெங்கு அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
செவ்விளநீர் உற்பத்தி நாட்டில் முன்னேற்றமின்றிக் காணப்படுவதாகவும், மண் பரிசோதனையை மேற்கொண்டு செவ்விளநீர் செய்கைக்குப் பொருத்தமான பிரதேசத்தை அடையாளம் கண்டு, அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளை பணித்துள்ளார்.
கடந்த வருடம் 11 மில்லியன் செவ்விளநீர் தொகை ஏற்றுமதி செய்யப்பட்டதுடன், அதில் 110 மில்லியன் ரூபாய் இலாபமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 14 மில்லியன் செவ்விளநீர் தொகை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் 140 மில்லியன் ரூபாய் இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.