நாடு கடத்தபட்ட தமிழ் குடும்பங்கள் - சுவிட்ஸர்லாந்து தடுப்புக்காவலில் மூன்று உயிரிழப்புகள்!

சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு தமிழ் குடும்பங்களை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

நாடு கடத்தபட்ட தமிழ் குடும்பங்கள் - சுவிட்ஸர்லாந்து தடுப்புக்காவலில்  மூன்று உயிரிழப்புகள்!

நாடுகடத்தலின் போது அதிகாரிகளின் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் எங்கிஸ்டீனில் உள்ள புகலிட கோரிக்கையாளர்கள் முகாமில் இருந்து பொலிஸாரால் முன்னறிவிப்பின்றி அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கைக்கான விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளார்

இந்தநிலையில் சுவிட்ஸர்லாந்து தடுப்புக்காவலில் இதுவரையில் மூன்று உயிரிழப்புகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நகுலேஸ்வரன் விஜயன் சுவிட்ஸர்லாந்து பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தமது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி, நேசராசா ராசநாயகம் என்பவர் சுவிட்ஸர்லாந்தின் கம்பெலன் முகாமில் வைத்து உயிரிழந்ததுடன் அவரது மரணத்துக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.

குடும்பத்தினரின் கோரிக்கையையும் மீறி அவரது உடல் சுவிட்ஸர்லாந்தில் தகனம் செய்யப்பட்டது.

அதேநேரம் 2018ஆம் ஆண்டு 28 வயதான தமிழ்ப் பெண் ஒருவரின் மரணமும் பதிவானது.

அதே ஆண்டு, ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதாகவும் புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.