தமிழ் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் - சுரேஸ் பிரேமசந்திரன்!

இலங்கையில் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் தமிழ் தேசியத்தில் நிலவும் நெருக்கடிகள் குறித்து இந்திய பிரதமருக்கு கடிதமொன்று அனுப்பப்படும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (14) கூடி ஆராய்ந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நிர்வாக முடக்கல் போராட்டம் தொடர்பில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தெளிவுப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.