சிங்கள கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள்!

இலங்கை நீதிமன்றத்தால் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நேற்று முதல் சாகும்வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீன் பிடித்தாலும் அத்துமீறிவிட்டதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் மூவருக்கு நீதிமன்றம் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும், படகோட்டிகளுக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் சிங்கள கைதிகளுடன் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொடூரமும் நிகழ்ந்துள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவையும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இந்த ஆண்டு புறக்கணித்துள்ளனர்.