சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கசிவு - மோசடி வியாபாரத்தால் அவலநிலை!
நீண்ட காலமாகக் காணப்படும் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கசிவை நிறுத்த முடியாது என அது தொடர்பில் ஆராய்ந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவித்துள்ளனர்.
நீர்க் கசிவைத் தடுக்க தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நீர்க் கசிவைத் தடுக்கும் போர்வையில் மோசடி வியாபாரமொன்று இடம்பெறுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்போது, இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் 2021ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை உள்ளிட்டவையும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.